பாஜக நிர்வாகி கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்
|பாஜக நிர்வாகி கொலை வழக்கு தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை சிந்தாரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் சரமாரி வெட்டிகொலை செய்யப்பட்டார். இது குறித்து சிந்தாரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணி முடிக்கிவிடப்பட்டது.
விசாரணையில் முன்விரோதம் காரணமாக பாலசந்தர் சித்தாரிப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய் ஆகியோர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் கொலை வழக்கில் இருந்து தப்பி ஓடியவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் எடப்பாடி விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த பிரதீப், சஞ்சய், கலை, ஜோதி ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கொலை வழக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படவில்லை என கூறி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.