திருநெல்வேலி
பா.ஜனதா நிர்வாகி கொலை; போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை
|நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி கொலை செய்யப்பட்ட நிலையில், போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளம் தயாபரன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகன் ரஞ்சித் (வயது 29), கட்டிட காண்டிராக்டர். நேற்று முன்தினம் மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த பா.ஜனதா மாநகர இளைஞரணி செயலாளரான ஜெகன் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, ஜெகன் கொலை வழக்கில் தன்னையும் போலீசார் குற்றவாளியாக சேர்த்து கைது செய்து விடுவார்களோ? என்ற பயத்தில் ரஞ்சித் நேற்று மாலையில் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தொங்கினார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து விரைந்து சென்று, தூக்கில் தொங்கிய ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, ரஞ்சித்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மூளிக்குளத்தில் பா.ஜனதா நிர்வாகி கொலையை தொடர்ந்து நேற்று வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.