ராணிப்பேட்டை
பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
|ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் சோளிங்கரில் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் சோளிங்கரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். பொது செயலாளர்கள் கண்ணன் பாலகணபதி, மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் தேவராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பிரமிளா சம்பத், மாநில ஓ.பி.சி. அணி பொது செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர்தர மருத்துவமனை வசதிகளை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும், மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்காடு-ஆரணி புதிய பைபாஸ் சாலை திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தாமல் கிடப்பில் உள்ளது. உடனடியாக புதிய சாலை அமைக்க வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைப் பகுதிகளில் கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி, மகளிர் அணி துணைத்தலைவர் கிருஷ்ணசாந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், சோளிங்கர் ஒன்றிய தலைவர் பாரதி, வழக்கறிஞர் சீனிவாசன் உள்பட மாவட்டத் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சோளிங்கர் நகர தலைவர் சேகர் நன்றி கூறினார்.