பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு
|தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசு மாநிலங்களிடையே திணித்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்க மறுத்து வருகிறது.நடப்பாண்டிற்கான முதல் தவணை ஜூன் மாதத்தில் விடுவித்திருக்க வேண்டும். அப்படி விடுவிக்காத நிலையில் மத்திய அரசுக்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு பலமுறை கடிதங்கள் மாநில அரசால் எழுதப்பட்டது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.கல்வி முறையை சீரழிக்கிற வகையில் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு பாராளுமன்ற பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்ட தொகையை மாநில அரசுக்கு ஒதுக்காமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். நீட் திணிப்பால் தமிழக மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.இதையொட்டி புதிய கல்விக் கொள்கை திணிப்பினால் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிற மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பாக உடனடியாக நிதியை விடுவிக்குமாறு மத்திய பா.ஜ.க. அரசை கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.