< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க. மாவட்ட தலைவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

பா.ஜ.க. மாவட்ட தலைவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
20 Oct 2022 1:56 AM IST

பா.ஜ.க. மாவட்ட தலைவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.




மதுரை,

சமீபத்தில் பா.ஜ.க.வின் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதாகவும், அவரது பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக சிலைமான் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து சுசீந்திரன், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு மனுதாரரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜராகி, மனுதாரர், கட்சி ரீதியாக பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டி இருப்பதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரர் மதுரை மாவட்ட கோர்ட்டில் ஆஜராகி இனிவரும் காலங்களில் இதுபோன்று பேசமாட்டேன் என பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். நாள்தோறும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்