< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வி.சி.க.வினர் புகார்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வி.சி.க.வினர் புகார்

தினத்தந்தி
|
12 Sept 2023 12:53 AM IST

பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வி.சி.க.வினர் புகார் அளித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில், அக்கட்சியினர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, பெரம்பலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோரிடம் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர். அதில் ஒரு புகார் மனுவில், பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ் கடந்த 6-ந்தேதி பெரம்பலூரில் நடத்திய நூதன போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யையும், கூட்டணி கட்சியான தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யையும் அவதூறாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

இதே போல் அவர்கள் கொடுத்த மற்றொரு புகார் மனுவில், சமூக வலைத்தளமான முகநூலில் (பேஸ்புக்) ஒரு பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யையும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினையும், சேகர் பாபுவையும் மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அவதூறாக பேசிய பா.ஜ.க. கல்வியாளர் பிரிவின் மாநில துணைத் தலைவர் உமா ஹைமாவதி மீதும், அதனை முகநூலில் பதிவிட்ட தர்மபுரியை சேர்ந்த சஞ்சீவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜும், பா.ஜ.க. கல்வியாளர் பிரிவின் மாநில துணைத் தலைவர் உமா ஹைமாவதியும் கணவன்-மனைவி ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்