கடலூர்
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிகிறதா? கே.எஸ்.அழகிரி கேள்வி
|பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டே செல்கிறாரே தவிர அவரால் நிரூபிக்க முடிகிறதா? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
சிதம்பரம்,
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை கண்டித்தும், இந்த கலவரத்தை தடுக்க தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகர காங்கிரல் கமிட்டி சார்பில் சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.
நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர்.மக்கீன் வரவேற்றார். கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.வி.செந்தில்நாதன், மாநில செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர செயல் தலைவர் தில்லை கோ.குமார், மகளிரணி தில்லை செல்வி, கோ.ஜனகம், மாலா, நிர்வாகிகள் நூர் அலி, அன்பரசன், வெங்கடேசன், செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குற்றத்திற்கு துணை போகக்கூடாது
தொடா்ந்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விஷயம் உலக மனித குலத்தின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. ஆனால் மோடியின் மனசாட்சியை மட்டும் உலுக்கவில்லை.
தமிழகத்தில் மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள மனிதநேய மிக்க அனைவருமே இதற்காக திரண்டு எழுந்துள்ளார்கள். மோடிக்கு எதிரான மிகப்பெரிய மன உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் புரிந்து கொண்டு அவர் குற்றவாளிகளை பாதுகாக்கக்கூடாது. குற்றத்திற்கு துணை போக கூடாது. நியாயப்படுத்தக்கூடாது.
எதிர்மறை அரசியல்
அண்ணாமலையை பொறுத்தவரை நேர்மறை அரசியல் தெரியாது. எதிர்மறை அரசியல்தான் தெரியும். யாரோ அவரிடம் ஏட்டிக்கு போட்டி பேசினால் விளம்பரம் கிடைக்கும் என தவறாக சொல்லியுள்ளார்கள். நான் ஜனாதிபதியை சந்தித்து மோடி அரசில் 50 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என சொல்லி மனு அளிக்கலாம். அது செய்தியாகலாம், அதில் என்ன உண்மை இருக்க முடியும்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டே செல்கிறாரே தவிர அவரால் நிரூபிக்க முடிகிறதா? எதுவும் இல்லை. இதுதான் அவரது அரசியல், அது நல்ல அரசியல் அல்ல. அ.தி.மு.க. என்பது போலி முகம் தான். அ.தி.மு.க.விற்கு சமூக பிரச்சினையில் அக்கறை கிடையாது. அவர்களது இயக்கம் சந்தர்ப்பவாத இயக்கம். எனவே அவர்கள் பா.ஜ.க. பக்கம்தான் இருப்பார்கள். அவர்களிடம் கொள்கையை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.