'பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாது' - திருமாவளவன்
|'பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவை,
கோவையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது;-
"நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தென் இந்தியாவில் தமிழகத்தை தவிர சில மாநிலங்களில் பா.ஜ.க.வால் சில இடங்களில் வெற்றி பெற முடிந்திருக்கிறது. கேரளாவில் ஒரு நடிகரை வைத்து ஒரு தொகுதியை கைப்பற்றி இருக்கிறார்கள். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் துணையுடன் 3 இடங்களை கைப்பற்றி இருக்கிறார்கள். கர்நாடகாவில் சில இடங்களை பறிகொடுத்தாலும், 9 இடங்களை தக்கவைத்துக் கொண்டார்கள். தெலுங்கானாவிலும், மராட்டியத்திலும் கூட சில இடங்களை கைப்பற்றி இருக்கிறார்கள்.
ஆனால் தென் இந்திய மாநிலங்களில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாத ஒரே மண் தமிழ் மண்தான். அவர்களின் ஜம்பம் பலிக்காத ஒரே இடம் தமிழ்நாடுதான். எத்தனை குட்டிக்கரணங்களை போட்டாலும், பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியால் எப்படி அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்தது என 'இந்தியா' கூட்டணி தலைவர்களே வியந்து பார்க்கிறார்கள்.
பொதுவாக தேர்தல் காலங்களில் கூட்டணி அமையும், பின்னர் கலைந்து போய் விடுவார்கள். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் கூட்டணி அப்படியானதுதான். ஆனால் தி.மு.க. தலைமையில் உருவான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னரே மக்களின் நலனை அடிப்படையாக வைத்து உருவான கூட்டணி. டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை முன்வைத்து உருவான கூட்டணி. அதுதான் இன்றுவரை தொடர்கிறது."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.