< Back
மாநில செய்திகள்
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் -வைகோ பேட்டி
மாநில செய்திகள்

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் -வைகோ பேட்டி

தினத்தந்தி
|
2 Jan 2023 4:55 AM IST

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க.வில் அடுத்த 3 மாதங்களுக்கு அமைப்பு தேர்தல் நடைபெறும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இளைஞர்கள் ஆர்வத்துடன் ம.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். இதன் மூலம், ம.தி.மு.க. என்ற இயக்கம் புதிய பொலிவும், வலிமையும் பெற்று வருகிறது. துரை வைகோ தயாரித்த 'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் தமிழகத்தில் 46 இடங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு உள்ளனர். எனவே, ம.தி.மு.க. அமைதியாக இருக்கவில்லை. அமைதியாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான சமூகநீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஒவ்வொரு பிரச்சினையாக நாட்டில் நடைபெற்று வருகிறது. உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதிக்கு புதைகுழி தோண்டப்பட்டு உள்ளது.

அதே போன்று பல மதங்கள், பல சமய நம்பிக்கை கொண்டுள்ள நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்து நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்த வழி வகுக்கின்றனர். காஷ்மீரில் அரசியல் அமைப்பு சட்டத்தின் 371-வது பிரிவை ரத்து செய்து, அதனை 3 யூனியன் பிரதேசங்களாக மாற்றி விட்டனர். இப்படி ஒவ்வொரு அஜெண்டாவாக பா.ஜ.க.வினர் நிறைவேற்றி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள்

தமிழக கவர்னர் மத்திய அரசின் ஏஜெண்டாக இல்லாமல், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சின் ஏஜெண்டாக செயல்பட்டு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க முயல்கிறார். இங்கு திருக்குறளையும், புறநானூறையும் பேசுவதன் மூலம் யாரையும் ஏமாற்றி விட முடியாது.

தமிழகம்தான் எல்லா வகையிலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதல் தரம் வாய்ந்த மாநில அரசாக உள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் வெற்றி பெறாத வகையில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான திராவிட மாடல் அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். அவர்கள் எண்ணிக்கை அளவில் அதிகமாகிவிட்டனர். மீண்டும் அதே போன்று வெற்றி பெற நினைக்கின்றனர். எனவே, பா.ஜ.க. அல்லாத அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால்தான் அவர்களை வெற்றி பெற முடியும். ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர் மக்களின் ஆதரவை திரட்டிய பின்னர்தான் தலைமை தாங்க முன்வரலாம் என்பது அவரது திட்டமாகவும், நோக்கமாகவும் இருக்கலாம்.

துரை வைகோ போட்டியா?

தமிழகத்தில் பா.ஜ.க. வளர அ.தி.மு.க.தான் காரணம் என சொல்ல முடியாது. அவர்கள் பணத்தை கொட்டிக்கொடுத்து கொடிக்கம்பங்களை நடுகின்றனர். எங்கள் கூட்டணி நல்ல வலுவாக இருக்கிறது. சரியாகவும் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ போட்டியிடுவது குறித்து இப்போது கூற அவசியம் இல்லை.

நான் தமிழ்நாட்டிற்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் 55 ஆண்டுகளாக பொது வாழ்க்கை நடத்தி வருகிறேன். என்னுடைய பொது வாழ்க்கை மிகவும் கரடு முரடான பாதை; ஏமாற்றங்களும், தோல்விகளும், சிறைச்சாலை வாழ்க்கையுமாக எனது பொது வாழ்க்கை கழிந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்தியா, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்