'தோல்வி பயத்தில் கெஜ்ரிவாலை பா.ஜ.க. கைது செய்துள்ளது' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|பா.ஜ.க. அரசாங்கத்தால் எதிர்க்கட்சித் தலைவர்கள் இடைவிடாமல் துன்புறுத்தப்படுகின்றனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"2024 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 10 ஆண்டுகால தோல்விகள் மற்றும் வரப்போகும் தேர்தலில் கிடைக்கப்போகும் தோல்வி ஆகியவற்றின் பயத்தால், ஹேமந்த் சோரனை அநியாயமாக குறிவைத்ததை தொடர்ந்து, தற்போது டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் பாசிச பா.ஜ.க. அரசு வெறுக்கத்தக்க வகையில் தாழ்ந்துவிட்டது.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் சீரழிவின் காரணமாக, ஒரு பா.ஜ.க. தலைவர் மீது கூட விசாரணையோ, கைது நடவடிக்கையோ மேற்கொள்ளப்படுவதில்லை. பா.ஜ.க. அரசாங்கத்தால் எதிர்க்கட்சித் தலைவர்கள் இடைவிடாமல் துன்புறுத்தப்படுகின்றனர்.
இந்த சர்வாதிகாரப் போக்கு பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது. பா.ஜ.க.வின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்கிறது. ஆனால் அவர்களின் வீணான கைது நடவடிக்கைகள் நமது உறுதியை அதிகப்படுத்தி, 'இந்தியா' கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்துகிறது."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.