< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு
மாநில செய்திகள்

பா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
11 March 2024 8:58 PM IST

பெரம்பலூரில் 3-வது முறையாக போட்டியிடுகிறேன் என்று பாரிவேந்தர் எம்.பி. கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மத்தியில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. மீண்டும் மோடி தான் பிரதமர் ஆவார் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்தாலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதி காட்டி வருகிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதன்காரணமாக தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்த பா.ஜ.க இதர கட்சிகளை தன்பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அதன் கூட்டணி தலைவர்களுடன் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி எல். முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பா.ஜ.க. கூட்டணியில் ஐ.ஜே.கே.வுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிட உள்ளேன். தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளேன். இந்திய ஜனநாயக கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதியையும் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க.விடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து பரிசீலித்து ஆராய்ந்து வழங்குவதாக கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்