மதுரை
பிட்டுக்கு மண்சுமந்த லீலை:பாண்டிய மன்னனாக முருகப்பெருமான் மீனாட்சி பட்டணத்திற்கு புறப்பாடு- 26-ந் தேதி நடக்கிறது
|திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து வருகின்ற 26-ந்தேதி முருகப்பெருமான் பாண்டிய மன்னனாக மீனாட்சி பட்டணத்திற்கு புறப்படுகிறார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து வருகின்ற 26-ந்தேதி முருகப்பெருமான் பாண்டிய மன்னனாக மீனாட்சி பட்டணத்திற்கு புறப்படுகிறார்.
பாண்டிய மன்னனாக முருகன்
உலகபுகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. அதாவது திருப்பரங்குன்றம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பெருவிழாவில் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண வைபோகத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளுவது தனிசிறப்பு ஆகும்.
ஆண்டுதோறும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் வந்து செல்வது புராணம் காலம்தொன்று தொட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதே போல திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன்சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் கலந்து கொள்வார்.
மீனாட்சி பட்டணம் புறப்பாடு
திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து புறப்பட்டு வரும் பவளக்கனிவாய் பெருமாள்தான் மீனாட்சி அம்மனுக்கு சுந்தரேசுவரரை தாரை வார்த்து கொடுப்பார். இதேபோல மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மாதத்தில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அருள் பாலிப்பார். இத்தகைய நிகழ்வுகள் காலம் காலமாக தொன்று தொட்டு நடந்து வருகிறது.
இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 27-ந் தேதி பிட்டுக்குமண் சுமந்த லீலை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக 26-ந்தேதி காலை 8.30 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து முருகப்பெருமான் பாண்டிய மன்னனாக மீனாட்சி பட்டணத்திற்கு புறப்பட்டு செல்கிறார். 31-ந் தேதி மீண்டும் ஊர் திரும்புகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.