கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய காட்டெருமை: பத்திரமாக மீட்ட வனத்துறை
|திருச்சி வையம்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில் காட்டெருமை ஒன்று விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தது.
திருச்சி,
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டி அருகே செம்மலையில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளன. இந்த காட்டெருமைகள் அவ்வப்போது விவசாய நிலங்களை நோக்கி வருகின்றன. அந்த வகையில், நடுப்பட்டியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் காட்டெருமை ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. இதை கண்ட அப்பகுதியினர் மணப்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது, காட்டெருமை தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தது.
இதையடுத்து காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கால்நடை மருத்துவக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவக்குழுவினர் அங்கு விரைந்து வந்து காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் காட்டெருமை மயங்கியதும், தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிரேன் உதவியுடன் காட்டெருமையை மீட்டனர். அதன்பின் மருத்துவக்குழுவினர் காட்டெருமைக்கு சிகிச்சை அளித்தனர். மயக்கம் தெளிந்ததும் காட்டெருமை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.