< Back
மாநில செய்திகள்
காட்டெருமை தாக்கி தி.மு.க. முன்னாள் எம்.பி. படுகாயம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தேனி
மாநில செய்திகள்

காட்டெருமை தாக்கி தி.மு.க. முன்னாள் எம்.பி. படுகாயம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தினத்தந்தி
|
28 Sept 2023 2:30 AM IST

பெரியகுளம் அருகே காட்டெருமை தாக்கி தி.மு.க. முன்னாள் எம்.பி. படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரியகுளம் அருகே காட்டெருமை தாக்கி தி.மு.க. முன்னாள் எம்.பி. படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காட்டெருமைகள் அட்டகாசம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவி பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் அடுக்கம் மலைப்பாதையின் இருபுறமும் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன.

இதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை தண்ணீர் தேடி தினமும் மாந்தோப்பு பகுதிக்கு வந்து செல்கின்றன. அவ்வாறு வரும்போது மாமரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கின்றன. மேலும் மாந்தோப்புகளில் வேலை செய்யும் காவலாளிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களை காட்டெருமைகள் தாக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது.

தி.மு.க. முன்னாள் எம்.பி.

இந்தநிலையில் பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் ஞானகுருசாமி (வயது 70). தி.மு.க. முன்னாள் எம்.பி. இவர் கடந்த 1996 முதல் 1998-ம் ஆண்டு வரை பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்தார். மேலும் அவர் வக்கீலாகவும் பணியாற்றினார். இவருக்கு சொந்தமான மாந்தோப்பு கும்பக்கரை பகுதியில் இருந்து அடுக்கம் செல்லும் சாலையில் உள்ளது. ஞானகுருசாமி நேற்று காலை வழக்கம்போல் தனது மாந்தோப்புக்கு சென்றார். அப்போது மாந்தோப்பில் நடந்த தோட்ட பணிகளை மேற்பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

கும்பக்கரை-அடுக்கம் சாலையில் நொச்சிப்பாளையம் என்ற பகுதியில் அவர் வந்தபோது, சாலையின் குறுக்கே காட்டெருமை ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த காட்டெருமை ஞானகுருசாமியின் மோட்டார் சைக்கிளை தாக்கியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தூக்கிவீசப்பட்டார். அப்போது அவருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

தீவிர சிகிச்சை

இதற்கிடையே அந்த வழியாக வந்த தோட்ட தொழிலாளர்கள், ஞானகுருசாமி மயங்கி கிடப்பதை பார்த்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் பதறியடித்தபடி சம்பவ இடத்துக்கு வந்தனர். உடனடியாக ஞானகுருசாமியை மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம், காட்டெருமை அட்டகாசத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

காட்டெருமை தாக்கியதில் தி.மு.க. முன்னாள் எம்.பி. படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்