ராமநாதபுரம்
சிக்கல் ஊருணியில் இரை தேடும் பறவைகள்
|தண்ணீர் இல்லாததால் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடியது. இந்த நிலையில் சிக்கல் ஊருணியில் பறவைகள் இரை தேடுகின்றன.
சாயல்குடி,
தண்ணீர் இல்லாததால் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடியது. இந்த நிலையில் சிக்கல் ஊருணியில் பறவைகள் இரை தேடுகின்றன.
பறவைகள் சரணாலயம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த சரணாலயத்திற்கு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதும் கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை கொத்தி நாரை, சாம்பல் நிற நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வரும்.
இந்த பறவைகள் உள்ள அங்குள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்ந்து வரும். கோடைகால சீசன் தொடங்கும் முன்னதாக மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதத்தில் அனைத்து பறவைகளும் திரும்பி சென்று விடும்.
தண்ணீர் இல்லாமல் வெறிச்சோடின
இதனிடையே கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் போதிய மழையே பெய்யாததால் மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் குறைவாக காணப்படுகிறது. இதனால் பறவைகள் வராததுடன் தற்போது வரை சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அதுபோல் மாவட்டத்தில் உள்ள பல கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்பட்டு வருவதால் பறவைகள் நீர்நிலையை தேடி அலைந்து வருகின்றன.
இரை தேடும் பறவைகள்
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சிக்கல் ஊருணியில் தற்போது ஓரளவு தண்ணீர் இருந்து இருக்கிறது. இதனால் அங்கே இரை தேடுவதற்காக ஏராளமான நத்தை கொத்தி நாரை, வெள்ளை நிற கொக்குகள் உள்ளிட்ட பறவைகள் அங்கு குவிந்துள்ளன.
இந்த பறவைகள் ஊருணியின் கரையோரத்தில் ஒன்று சேர்ந்து வரிசையாக நின்றபடி ஓய்வு எடுத்த படியும் பின்னர் தண்ணீரில் ஒரே நேரத்தில் இறங்கி நின்றபடி மீன்களை கொத்தி இரை தேடுவதையும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.