ராமநாதபுரம்
குஞ்சுகளுடன் திரும்பும் பறவைகள்
|முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தின் நீர்நிலை வறண்டதால் குஞ்சுகளுடன் பறவைகள் திரும்பி சென்றன.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தின் நீர்நிலை வறண்டதால் குஞ்சுகளுடன் பறவைகள் திரும்பி சென்றன.
பறவைகள் சரணாலயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே மேலச் செல்வனூர், ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல், சக்கரக் கோட்டை முதுகுளத்தூர் பகுதியில் சித்திரங்குடி, காஞ்சி ரங்குளம் என 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன.
அதுபோல் இந்த பறவைகள் சரணாலயங்கள் அனைத்தும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இந்த சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்து டிசம்பர் மாதம் முதல் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கும். இவ்வாறு வரும் பறவைகள் மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் குஞ்சுகளுடன் திரும்பி சென்று விடும்.
மிககுறைவு
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சித்திரங்குடி மற்றும் காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு இந்த ஆண்டு அதிகமான பறவைகள் வரவில்லை. பறவைகள் சரணாலயத்தில் நீர் நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் இந்த சரணாலயங்களிலும் பறவைகள் வரத்து இந்த ஆண்டு மிக குறைவாகவே இருந்தது.
இதன் இடையே சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் முழுமையாக வறண்டு போனதால் பெரும்பாலான பறவைகள் குஞ்சுகளுடன் திரும்பி சென்றுவிட்டன. மிக குறைந்த அளவிலான செங்கால் நாரை மற்றும் சாம்பல் நிற நாரை பறவைகளே மரக்கிளைகளில் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன.
இது பற்றி வனத்துறையினர் கூறியதாவது:- முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி மற்றும் காஞ்சிரங்குளம் 2 பறவைகள் சரணாலயங்களுக்கும் இந்த ஆண்டு பறவைகள் வரத்து மிக மிக குறைவாகவே இருந்தது. இந்த பகுதியில் கடந்த ஆண்டு அதிக அளவு மழை இல்லாததால் பறவைகள் சரணாலயத்தில் நீர் நிலையிலும் தண்ணீர் அதிகமாக வரவில்லை. சித்திரங்குடி பறவைகள் சரணால யத்தில் தான் ஓரளவு பறவைகள் வந்திருந்தன.
வாய்ப்பு
அதிலும் தற்போது அதிக பறவைகள் குஞ்சுகளுடன் திரும்பி சென்றுவிட்டன. மிக சொற்ப அளவிலான பறவைகள் தான் தற்போது மரக்கிளைகளில் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன. அந்த பறவைகளும் இன்னும் ஓரிரு நாளில் திரும்பி சென்று விட வாய்ப்பு உண்டு. இவர் அவர் கூறினார்.