< Back
மாநில செய்திகள்
தேர்த்தங்கல் சரணாலயத்தில் குஞ்சுகளுடன் தங்கிய பறவைகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தேர்த்தங்கல் சரணாலயத்தில் குஞ்சுகளுடன் தங்கிய பறவைகள்

தினத்தந்தி
|
4 Jun 2022 11:24 PM IST

சீசன் முடிந்து 3 மாதங்களை கடந்தும் ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் குஞ்சுகளுடன் வெளிநாட்டு பறவைகள் தங்கி உள்ளன.

ராமநாதபுரம்,

சீசன் முடிந்து 3 மாதங்களை கடந்தும் ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் குஞ்சுகளுடன் வெளிநாட்டு பறவைகள் தங்கி உள்ளன.

5 சரணாலயங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. சாயல்குடி அருகே மேலச்செல்வனூர், முதுகுளத்தூர் காஞ்சிரங்குளம், சித்திரங்குடி மற்றும் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய், நயினார் கோவில் செல்லும் சாலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் என 5 பறவைகள் சரணாலயங்கள் அமைந்து உள்ளன.

அதுபோல் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர், நவம்பர் மாதம் முதல் ஏராளமான பறவைகள் வருவது வழக்கம். இவ்வாறு வரும் பறவைகள் மீண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் திரும்பி சென்று விடும்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் செல்லும் சாலையில் உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே பறவைகள் வரத்தொடங்கின. இந்த பறவைகள் சரணால யத்திற்கு மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, சங்கு வளை நாரை, சாம்பல் நிற நாரை, சாம்பல் நிற கூழைக்கடா, வெள்ளை நிற கூழைக்கடா உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்து இருந்தன.

அதுபோல் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பாதிஅளவு பறவைகள் மட்டுமே குஞ்சுகளுடன் திரும்பி சென்றுள்ளன.

பருவமழை

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில் அதிக அளவு மழை பெய்ததால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தின் நீர் நிலையிலும் தற்போது வரை தண்ணீர் வற்றாமல் இருந்து வருகிறது. வழக்கமாக மார்ச் மாதத்தில் அனைத்து பறவைகளும் திரும்பி செல்லும் நிலையில் இந்த ஆண்டு சீசன் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் தற்போது வரையிலும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தின் மரக்கிளைகளில் கூடுகட்டி ஏராளமான பறவைகள் குஞ்சுகளுடன் வாழ்ந்து வருகின்றன.

குறிப்பாக மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா பறவைகள் தான் அதிக அளவில் மரக்கிளைகளில் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன.மேலும் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் குறையாமல் அதிக அளவு இருந்து வருவதால் அந்த தண்ணீரில் கூழைக்கடா பறவைகள் ஒன்று சேர்ந்து நீந்தியபடி மீன்களை கவ்விப்பிடித்து சாப்பிட்டு வருகின்றன.

கொக்கு

இவைதவிர ஏராளமான நீர் காகங்கள், வெள்ளை கொக்குகளும் குவிந்துள்ளன. தேர்த்தங்கல் பறவைகள் சரணால யத்தில் தங்கி உள்ள கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகளை ஏராளமான சுற்றுலா பயணிகளும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் பார்த்து ரசித்து வருகின்றனர். தற்போது சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

மேலும் செய்திகள்