< Back
மாநில செய்திகள்
தேர்த்தங்கல் சரணாலயத்தில் பறவைகள் வராததால் கிராம மக்கள் ஏமாற்றம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தேர்த்தங்கல் சரணாலயத்தில் பறவைகள் வராததால் கிராம மக்கள் ஏமாற்றம்

தினத்தந்தி
|
26 Feb 2023 12:15 AM IST

சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது வரை பறவைகள் வராததால் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நயினார்கோவில்,

சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது வரை பறவைகள் வராததால் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பறவைகள் சரணாலயம்

நயினார் கோவில் செல்லும் சாலையில் உள்ளது தேர்த்தங்கல் கிராமம். இந்த கிராமத்தில் 29.30 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள குளமானது கடந்த 2010-ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியவுடன் அக்டோபர் மாதத்தில் இருந்து கூழைக்கடா, செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கருப்பு அரிவாள்மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன் என ஏராளமான பறவைகள் சீசனுக்காக வரும். இவ்வாறு வரும் பறவைகள் சரணாலயத்தின் மரக்கிளைகளில் உள்ள கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரும்பி செல்லும்.

இந்த நிலையில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சீசனில் மழையே பெய்யவில்லை. மழை பெய்யாததால் தேர்த்தங்கல் கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்திலும் இந்த ஆண்டு பறவைகள் வரவில்லை. கடந்தாண்டு அதிகளவு பெய்த மழையால் தற்போதும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் உள்ளது. இருப்பினும் மழை இல்லாத காரணத்தினால் சரணாலயத்திற்கு தற்போது வரை பறவைகளை வரவில்லை.

கிராம மக்கள் ஏமாற்றம்

செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட ஒரு சில பறவைகள் மட்டுமே அங்குள்ள தண்ணீரில் இரை தேடி வருகின்றன. பறவைகள் வராததால் சரணாலயத்தின் நீர்நிலைகளில் வளர்ந்து நிற்கும் மரக்கிளைகள் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் தற்போது வரை பறவைகள் வராததால் இந்த ஆண்டு இனி பறவைகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்தாண்டு இதே பறவைகள் சரணாலயத்திற்கு அதிக அளவிலான பறவைகள் வந்து சென்ற நிலையில் இந்த ஆண்டோ பறவைகளே வராததால் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்