பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்தில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
|தமிழகத்துக்குள் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
சென்னை,
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் இருப்பதால் அந்த காய்ச்சல் தமிழகத்துக்குள் பரவுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.
அத்துடன் சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. அதுபோன்று கேரளாவில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்தால் அவை என்ன பொருட்கள் என்று வாகனம் முழுவதுமாக சோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கால்நடைத்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் கொண்டுவரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக- கேரள எல்லையில் 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.