< Back
மாநில செய்திகள்
பறவை காய்ச்சல் எதிரொலி- நாமக்கல் கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரம்
மாநில செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி- நாமக்கல் கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரம்

தினத்தந்தி
|
28 Oct 2022 11:54 AM IST

கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள கோழி பண்ணையாளர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.

நாமக்கல்,

இந்தியாவில் அடிக்கடி பறவை காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்படும் போது ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்படுவதுடன் கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சி அடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1800 வாத்துகள் திடீரென இறந்தன. வாத்துக்கள் ஒரே நேரத்தில் இருந்ததால் கால்நடை பராமரிப்பு துறையினர் அதன் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் பறவை காய்ச்சல் தாக்கத்தினால் அவை இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலப்புழா மாவட்டம் பாலுதனம் நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து பறவை காய்ச்சல் வேறு இடங்களுக்கு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் அங்கிருந்து கோழிகள் வெளியிடங்களுக்கு அனுப்பப்படாமல் இருக்க வெளியூர் வாகனங்கள் அங்கு செல்லாமலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள கோழி பண்ணையாளர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து தினமும் சுமார் ஒரு கோடி முட்டைகள் மற்றும் அதிக அளவில் கோழிகள் விற்பனைக்காக கேரள மாநிலத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ள பறவை காய்ச்சலால், தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படும் என நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் கருதுகிறார்கள்.

இதனால் கோழி பண்ணைகளுக்கு வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதன் பின்னே நாமக்கல்லுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழி பண்ணைகளுக்கு வரும் வாகனங்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்தும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கடந்த சில நாட்களாக ரூ.119-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.13 குறைத்து உள்ளனர். இதனால் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ.106-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாகவும், முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நீடிக்கிறது. இனிவரும் நாட்களில் பறவை காய்ச்சல் தமிழகத்திலும் பரவினால் கறிக்கோழியின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பண்ணையாளர்கள் தவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்