திண்டுக்கல்
பறவைகள் கணக்கெடுக்கும் பணி
|கொடைக்கானல் வனப்பகுதியில், பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், இயற்கை மற்றும் பறவைகள் ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட வன அதிகாரி திலீப், உதவி வன பாதுகாவலர் சக்திவேல் ஆகியோர் மேற்பார்வையில் 3 குழுக்களாக பிரிந்து கொடைக்கானல் பாம்பேசோலை, வட்டக்கானல் சோலை, பெருமாள்மலை, அடுக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கணக்கெடுத்து வருகின்றனர்.
நேற்று தொடங்கிய இந்த பறவைகள் கணக்கெடுப்பில் ஒயிட் செக்டு பாபட், பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்ச்சஸ், இந்தியன் பிளாக் பேர்ட், பிலே லாபின் ட்ரஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, நாளை (திங்கட்கிழமை) அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.