ராமநாதபுரம்
சீசன் தொடங்கும்முன் தேர்த்தங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருமா?
|வைகை தண்ணீர் வரத்தால் தண்ணீருடன் காட்சி அளித்து வரும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம். சீசன் தொடங்கும் முன்பு பறவைகள் வருமா?என எதிர்பார்ப்பில் கிராம மக்கள் உள்ளனர்.
வைகை தண்ணீர் வரத்தால் தண்ணீருடன் காட்சி அளித்து வரும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம். சீசன் தொடங்கும் முன்பு பறவைகள் வருமா?என எதிர்பார்ப்பில் கிராம மக்கள் உள்ளனர்.
பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலச்செல்வனூர், தேர்த்தங்கல், சக்கரகோட்டை கண்மாய், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி என 5 பறவைகள் சரணாலயங்கள் அமைந்து உள்ளன. இதில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் ராமநாதபுரத்தில் இருந்து நயினார் கோவில் செல்லும் நேர்த்திக்கடன் கிராமத்தில் அமைந்து உள்ளது.
அதுபோல் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கும். இவ்வாறு வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து பின்னர் மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரும்பி செல்லும்.
இதனிடையே கோடை காலம் நடைபெற்று வந்ததால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத் திலும் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர் வற்றி காணப்பட்டு வந்தது. இதனால் பெரும் பாலான பறவைகள் கடந்த 3 மாதத்திற்கு முன்பே திரும்பி சென்று விட்டன. தற்போது தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் பறவைகள் ஏதுமின்றி வெறிச்சோடியே காணப்பட்டு வருகிறது.
பெரிய கண்மாய்
இந்த நிலையில் மதுரை வைகை அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. மதுரையில் இருந்து வந்த வைகை தண்ணீர் ஆனது பார்த்திபனூர், பரமக்குடி வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதிக்கும் வந்தடைந்தது.
பெரிய கண்மாய் பகுதி நிறைந்த நிலையில் அங்கிருந்து சக்கரகோட்டை கண்மாய், திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கண்மாய்களுக்கும் வைகை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு கண்மாய் நிரப்பப்பட்டு வந்தது.
ராமநாதபுரம் அருகே பல கண்மாய்கள் வைகை தண்ணீர் வரத்தால் நிரம்பி உள்ள நிலையில் தற்போது தேர்த்தங்கல் பறவைகள் சரணாலய நீர் நிலையிலும் வைகை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு உள்ளதால் தேர்த்தங்கல் கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் நீர் நிலையிலும் தண்ணீர் நிரம்பி காட்சியளித்து வருகிறது.
வரப்பிரசாதம்
வைகை தண்ணீர் வரத்தால் பறவைகள் சரணாலயம் நீர்நிலை தண்ணீருடன் காட்சிஅளித்து வருவதால் இந்த ஆண்டு சீசன் தொடங்கும் முன்பு பறவைகள் வருமா என்ற எதிர்பார்ப்பில் கிராம மக்கள் உள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் வடகிழக்கு பருவமழை சீசனும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தங்கல் கிராமத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் ைவகை தண்ணீர் வந்துள்ளதால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மிகவும் வரப் பிரசாதமாக உள்ளதாக கூறப்படுகின்றது.