நாமக்கல்
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ெதாடக்கம்
|திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது. இதனையடுத்து கோவில்களில் உள்ள 11 உண்டியல்கள் திறந்து எண்ண முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று உண்டியல் திறந்து எண்ணும் பணிநடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இளையராஜா மற்றும் ரமணி காந்தன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. காணிக்கைகளை எண்ணும் பணியில் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக பிரதானமான 4 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. மீதமுள்ள 7 உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உண்டியல் எண்ணும் பணியை புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.