'தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
|தமிழ்நாட்டிற்குள் இந்தி, சமஸ்கிருதம் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், அ.தி.மு.க.வின் கொள்கை வேறு, பா.ஜ.க.வின் கொள்கை வேறு என்றும், இருமொழிக்கொள்கை தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
"எங்களைப் பொறுத்தவரை இந்தியை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். பா.ஜ.க.வின் கொள்கை வேறு, அ.தி.மு.க.வின் கொள்கை வேறு. அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியாக பா.ஜ.க. இருந்தாலும், இந்தி விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக்கொள்கை தான். இந்தியோ, சமஸ்கிருதமோ தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். மணிப்பூரில் சுமூக நிலை திரும்ப வேண்டும். இரு சமூகத்தினரிடையே வன்முறை நிலவக் கூடாது. பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு."
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.