< Back
மாநில செய்திகள்
பில்கிஸ் பானு வழக்கு: காந்தி பிறந்த ஊரில் நீதிக்கு இடமில்லையா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்
மாநில செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கு: காந்தி பிறந்த ஊரில் நீதிக்கு இடமில்லையா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

தினத்தந்தி
|
26 Aug 2022 8:05 PM IST

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பில்கிஸ் பானு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமானது குஜராத் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், ஆயுள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட 11 பேரையும் வழக்கில் இணைத்துள்ளது. தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ள இச்சம்பவத்தில் உச்சநீதிமன்றமானது இவ்வழக்கை விரைந்து விசாரித்து நீதியை நிலைநாட்டவேண்டும்.

மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மண்ணில் கர்ப்பிணியைப் பாலியல் வன்கொடுமை செய்து, பச்சிளங் குழந்தையை கொடூரமாக கொலை செய்த கும்பலை விடுதலை செய்ததும், அவர்களை கோலாகலமாக வரவேற்றதும் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இதுதான் இந்த நாட்டில் நீதியை நிலைநிறுத்தும் லட்சணமா?

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்துள்ள நிலையில், குஜராத்தில் பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, பச்சிளங் குழந்தை உட்பட அவரது குடும்பத்தினரைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1992-ம் ஆண்டைய கொள்கையின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக குஜராத் அரசு சப்பைக்கட்டு கட்டுகிறது. அவர்கள் செய்த குற்றத்தின் தன்மையைப் பார்த்திருந்தால், மனசாட்சி உள்ள யாரும் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள். சட்டத்தின் சந்துபொந்துகளைத் தேடிச் சென்று, விடுதலை செய்யும் அளவுக்கு அந்தப் 11 பேரும் தியாகிகளா?

'இவ்வளவு பெரிய அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், என் பாதுகாப்பைப் பற்றி யாரும் விசாரிக்கவில்லையே? அச்சமின்றி, நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை எனக்குத் திரும்பக் கொடுங்கள். நானும், எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்' என்று மனம் நொந்துப் பேசியிருக்கிறார் பில்கிஸ் பானு.

'கர்ப்பமாக இருக்கிறேன், என்னை விட்டுவிடுங்கள்' என்ற பில்கிஸ் பானுவின் அழுகுரல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தினாலும், சற்றும் கலங்கவில்லை குஜராத் அரசு. ஐந்து மாதக் கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்த, 3 வயது பெண் குழந்தையை கல்லில் ஒங்கி அடித்துக் கொன்றவர்களை விடுவித்து சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடியிருக்கிறது காந்தி பிறந்த மண்.

அதுமட்டுமின்றி, சிறையில் இருந்து வெளியே வந்தவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று, இனிப்பு வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். இது, உலக நாடுகளில் இந்திய தேசத்தின் மாண்பைக் குறைத்துவிடாதா? இந்தக் கொடுஞ்செயலை, அத்தனை ஜனநாயக சக்திகளும் ஒன்றுதிரண்டு எதிர்க்க வேண்டாமா?

நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின், தேசிய மனித உரிமை ஆணையத்தின் உதவியுடன் வழங்கப்பட்ட நீதியை தூக்கி எறிந்திருக்கிறது குஜராத் அரசு. மன்னிப்புக்குத் தகுதியற்றவர்களை விடுவித்தது, சட்டத்தையே கேலி செய்வதுபோல் இருக்கிறதே?

பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் பாரபட்சமான இந்த முடிவை, மனசாட்சி உள்ள யாருமே ஏற்க மாட்டார்கள். மத்திய அரசுக்கு மனசாட்சி இருந்தால், இதில் தலையிட்டு, முடிவை ரத்து செய்ய வேண்டும்.

கருவறுக்கும் கும்பல்களும், கொலைகார, பாலியல் வன்கொடுமை செய்யும் கும்பல்களும் இந்த முடிவைக் கொண்டாடலாம். ஆனால், இதயமுள்ளவர்கள் அத்தனை பேரும் கண்ணீர் வடிக்கின்றனர். ஒவ்வொருவரின் மனதிலும் கோபம் கொழுந்துவிட்டு எரிகிறது. அது உங்களை எரித்துவிடும்முன், தீர்ப்பைத் திருத்திக் கொள்ளுங்கள்!

பெண்களைப் போற்றும் அனைவரும் எதிர்க்கும் இச்செயலை (11பேர் விடுவிப்பை) மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்