கடலூர்
இரு தரப்பினர் மோதல்; வீடு, கடைகள் சூறை
|பண்ருட்டி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடு, கடைகள் சூறையாடப்பட்டன. மேலும் 11 வாகனங்களை அடித்து நொறுக்கியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி
பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர்கள் சவுந்தரராஜன் (வயது 30). குணாளன் மற்றும் 17 வயது சிறுவன். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் ராசாபாளையம் நான்கு முனை சந்திப்பில் உள்ள ஒரு கடைக்கு சென்று நூடுல்ஸ் பார்சல் கேட்டனர்.
அப்போது அங்கு வந்த ராசாபாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் (60), ராஜா (40) ஆகிய 2 பேரும் 17 வயது சிறுவனிடம் நீ எந்த ஊர் என கேட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் குணாளன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த பணப்பாக்கம் காலனியை சேர்ந்த குணாளன் மற்றும் சிறுவனின் உறவினர்கள் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்கும், ரங்கநாதன் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
11 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
இதில் நூடுல்ஸ் கடை மற்றும் அருகில் உள்ள 2 பெட்டிகடைகள், ஒரு வீடு உடைத்து நொறுக்கப்பட்டது. மேலும் 11 மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப்பட்டன.
இந்த தாக்குதலில் ராசாப்பாளையத்தை சேர்ந்த அஞ்சலாட்சி (47), பீரவீன் (18) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ராசாப்பாளையத்தை சேர்ந்த சந்திரன் மனைவி அஞ்சலாட்சி அளித்த புகாரின் பேரில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் சவுந்தரராஜன் (30), நந்தகோபால் (23), பிரபாகரன் (30), எத்திராஜ் மகன் நந்தகோபால் (28), நிஜந்தன் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
போலீஸ் குவிப்பு
இதேபோல் பணப்பாக்கம் காலனியை சேர்ந்தவர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து கொளஞ்சி (34), சுரேஷ் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்து.