கள்ளக்குறிச்சி
இருதரப்பு மோதல்; 2 பேர் கைது
|இருதரப்பு மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூரை சேர்ந்தவர் தாண்டவன் மகன் குபேந்திரன் (வயது 30). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மகன் பிரபு என்பவருக்கும் நிலத்துக்கு பொது கிணற்றில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்த நிலையில் குபேந்திரன் மற்றொரு விவசாயியான வெங்கடேசன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்கான ஏற்பாடுகளை நேற்று காலை செய்தார். அப்போது, அங்கு வந்த காலிங்கம் தரப்பினருக்கும், குபேந்திரன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இது தொடர்பாக குபேந்திரன் அளித்த புகாரின் பேரில், காசிலிங்கம் மகன்கள் பிரபு (28), சங்கர் (33) இளவரசன், பாவாடை மகன் ஜெயபால் ஆகிய 4 பேர் மீது பகண்டைகூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அதேபோல் இளவரசன் அளித்த புகாரின் பேரில் தாண்டவன், அவரது மகன்கள் சிவக்குமார், குபேந்திரன், ரஞ்சித்குமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.