திருநெல்வேலி
இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது
|ஏர்வாடியில் இருதரப்பினர் மோதிக் கொண்டது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏர்வாடி:
தெற்கு வள்ளியூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 18). பெயிண்டரான இவர் நேற்று முன்தினம் ஏர்வாடி மீனாட்சிபுரத்துக்கு நண்பர்களுடன் வேலைக்கு சென்றார். பின்னர் அங்கு வேலை முடிந்ததும் ஊருக்கு புறப்பட்டபோது, சேசையாபுரத்தை சேர்ந்த கண்ணன் (26), மணிகண்டன் (26), பிரவின்குமார் (19), மற்றொரு மணிகண்டன் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜனார்த்தனனை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஜனார்த்தனன் தெற்கு வள்ளியூரில் உள்ள தனது உறவினர் இளங்கோவிடம் (19) தெரிவித்தார். உடனே அங்கு வந்த இளங்கோ தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து இளங்கோ, ஜனார்த்தனனை அவதூறாக பேசி பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இளங்கோவின் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதற்கிடையே இளங்கோ, முகேஷ்குமார் (18), ஜனார்த்தனன் (18), அஸ்வின்பாபு (20), முரளிகாந்த் (19), மாதவன் (22) ஆகிய 6 பேரும் சேர்ந்து பிரவின்குமாரை பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இருதரப்பினரும் ஏர்வாடி போலீசில் அளித்த புகார்களின்பேரில், இருதரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக கண்ணன், மணிகண்டன், பிரவின்குமார், மற்றொரு மணிகண்டன், இளங்கோ, முகேஷ்குமார், ஜனார்த்தனன், அஸ்வின்பாபு, முரளிகாந்த் ஆகிய 9 பேரை கைது செய்தனர். தலைமறைவான மாதவனை தேடி வருகின்றனர்.