விழுப்புரம்
இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது
|இருதரப்பினர் மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் மனைவி சுகுணா (வயது 48). இவருக்கு 4 செண்ட் இடமும், அதே கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் (60), அவரது தம்பி துரை (58), ரங்கநாதன் மகன்கள் ஆனந்த் (27), சூர்யா (25) ஆகியோருக்கு 6½ செண்ட் இடமும் அருகருகே உள்ளது. இவர்கள் இரு தரப்பினருக்கும் சொந்தமான இடத்திற்கு இடையில் 3 செண்ட் புறம்போக்கு இடம் உள்ளது. அந்த இடத்தில் சுகுணா, பஞ்சர் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் ரங்கநாதன் உள்ளிட்ட 4 பேரும் அங்கு சென்று கடந்த 4 வருடமாக எங்கள் அனுபவத்தில் உள்ள இடத்தில் எப்படி கடை வைக்கலாம் எனக்கேட்டு சுகுணாவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பதிலுக்கு தாஸ் (57), சுகுணா ஆகிய இருவரும் சேர்ந்து ரங்கநாதன் மனைவி வசந்தாவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சுகுணா அளித்த புகாரின்பேரில் ரங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன், துரை, ஆனந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதேபோல் வசந்தா அளித்த புகாரின்பேரில் தாஸ், சுகுணா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசை கைது செய்தனர்.