சென்னை
காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தை கைப்பற்ற இருதரப்பினர் மோதல் - போலீசார் பூட்டி 'சீல்' வைத்தனர்
|காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தை கைப்பற்ற இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த சங்க கட்டிடத்தை பூட்டி போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
சென்னை காசிமேட்டில் செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த சங்கத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த சங்க கட்டிடம் போலீசாரால் பூட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விசாரித்த ஆர்.டி.ஓ., ஒரு தரப்புக்குதான் சங்கத்தின் உரிமை உள்ளதாக கூறி ஆணை அனுப்பினார். இதனால் போலீசார் நேற்று காலை இந்த சங்க கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
ஆனால் அந்த ஆணையில் சங்கத்தின் பெயர் தவறுதலாக இடம் பெற்று உள்ளதாகவும், எனவே இந்த செங்கை சிங்காரவேலர் சங்கத்தை திறந்தது தவறு என்றும் கூறி மற்றொரு தரப்பினர் சங்க அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினரும் அங்கு கூடியதால் பதற்றம் ஏற்பட்டது.
போலீஸ் உதவி கமிஷனர்கள் இருதயம், முகமது நாசர் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இருதரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் உண்டாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் போலீசார் மீண்டும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்புவதாக கூறினர்.
இதையடுத்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர். போலீசார் சங்க கட்டிடத்தை மீண்டும் பூட்டி 'சீல்' வைத்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க அங்கு மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.