மதுரை
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரம்:கைதானவருக்கு சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க உத்தரவிட முடியாது- மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்
|பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரம்:கைதானவருக்கு சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க உத்தரவிட முடியாது என்று மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
டெல்லியை சேர்ந்த குமார் திவாரி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என்னுடைய சகோதரர் மனிஷ் காஷ்யப். இவர் 2018-ம் ஆண்டு யூ-டியூப் சேனல் உருவாக்கி பீகார் மக்களின் குறைகளையும், ஊழல்களையும் வீடியோவாக பதிவு செய்து, யூ-டியூப் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் மனிஷ் காஷ்யப், பீகார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போன்ற வீடியோ வெளியிட்ட வழக்கில் அவரை பீகார் போலீசார் கைது செய்தனர். பின்பு அவரை மதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எனது சகோதரர் மனிஷ் காஷ்யப்பை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 4 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார். இங்கு அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார். எனவே சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கித்தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காஷ்யப்புக்கு மதுரை மத்திய சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, சிறையில் மனுதாரருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கக்கோரிய மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சகோதரர் தீவிரமான குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது கோரிக்கையை ஏற்கக்கூடாது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
இதனையடுத்து நீதிபதிகள், மனிஷ் காஷ்யப் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என்றனர்.
இதையடுத்து இந்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.