சமூகநீதியின் தலைநகரமாக திகழ்கிறது பீகார் - டாக்டர்.ராமதாஸ்
|முதல் சாதிவாரி கணக்கெடுப்பும், அதனடிப்படையிலான இட ஒதுக்கீடு அதிகரிப்பும் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் நடந்திருக்க வேண்டும் என்று டாக்டர்.ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அம்மாநில முதல்-அமைச்சர் நிதீஷ்குமார், இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, பீகாரில் இட ஒதுக்கீடு 65% ஆக உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது;
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, அதன் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் மாநிலத்தின் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டில் இருந்து 65% ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு 13 விழுக்காட்டில் இருந்து 20% ஆகவும், இரு பிரிவு ஓபிசி இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 43% ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. பழங்குடியினர் இட ஒதுக்கீடு 2% ஆக நீடிக்கும்.
இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநில அரசின் முடிவு பாராட்டப்பட வேண்டியது. சமூகநீதியின் தலைநகரம் பீகார் தான் என்பதை அம்மாநில அரசு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
மாநில அரசுகள் நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடவோ, அதன் அடிப்படையில் முடிவெடுக்கவோ எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதால், பீகார் அரசின் இந்த முடிவுகளை செயல்படுத்த சட்டப்படியாக எந்தத் தடையும் இல்லை. மாநில அரசுகள் நடத்தும் கணக்கெடுப்பை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவரும் நிலையில், பீகார் அரசு சமூகநீதிப் பயணத்தில் புரட்சிகரமான மைல்கல்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
பீகார் அரசின் இந்த நடவடிக்கைக்கு பிறகும் தமிழக அரசு தானாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப் போகிறதா? அல்லது அந்தப் பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு சமூக அநீதி இழைக்கப் போகிறதா? என்பது தான் இப்போது நம்முன் உள்ள வினா ஆகும். பீகாரில் 63% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு இதுவரை 30% ஆக இருந்து வந்த நிலையில், இனி அது 43% ஆக உயர்த்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை 69%க்கும் அதிகமாக உள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்து, அதற்கேற்ற விகிதத்தில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.
முதல் சாதிவாரி கணக்கெடுப்பும், அதனடிப்படையிலான இட ஒதுக்கீடு அதிகரிப்பும் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் நடந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பை நழுவவிட்டு விட்ட தமிழக அரசு, நான்காவது அல்லது ஐந்தாவது மாநிலமாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், அருந்ததியர், பழங்குடியினர் ஆகிய அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அதில் கூறியுள்ளார்.