பெரம்பலூர்
செஞ்சேரி பெருமாள்-முத்து மாரியம்மன் கோவிலில் பெரிய பூஜை விழா
|செஞ்சேரி பெருமாள்-முத்து மாரியம்மன் கோவிலில் பெரிய பூஜை விழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வந்தனர்.
பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் கல் ஒட்டத்தெருவில் விநாயகர், வேணுகோபால் பெருமாள், ருக்மணி சத்தியபாமா, வீரபுத்திரர், பட்டாளம்மன், சோமாலய வீரன், முத்து மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய பூஜை விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடைசியாக இந்த கோவிலின் பெரிய பூஜை விழா கடந்த 2014-ம் ஆண்டு நடந்தது. அதற்கு பிறகு கொரோனா ஊரடங்கினால் கடந்த 2019-ம் ஆண்டு கோவில் பெரிய பூஜை விழா நடைபெறவில்லை.
இந்தநிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலின் பெரிய பூஜை திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலில் பெரிய பூஜை நடந்தது. நேற்று காலை முத்து மாரியம்மன் குடி அழைத்தல் நடந்தது. பின்னர் மாலையில் செஞ்சேரி முரீயன் குளக்கரையில் இருந்து பம்பை மற்றும் தப்பாட்டம் முழங்க விரதமிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற நேர்த்திக் கடனாக அலகு குத்தியும், பால் குடம், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மா விளக்கு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் வாணவேடிக்கை, கரகாட்டத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மதியத்திற்குள் பெரியாண்டவர் பூஜையும், பொங்கல் வைத்து வழிபாடும், கிடா வெட்டும் நடக்கிறது. இரவில் நாடகம் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குடிப்பாட்டு மக்களும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.