தர்மபுரி
பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது
|தர்மபுரியில் வரத்து அதிகரிப்பு காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்தது. இதனால் 5 கிலோ ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமையலில் வெங்காயம்
சமையல் என்றாலே அதில் பிரதானமாக இடம்பெறும் காய்கறி என்றால் அது வெங்காயம் தான். சட்னி, சாம்பார், கூட்டு, பொறியல், அவியல் என என்ன உணவாக இருந்தாலும், உணவின் சுவையை கூட்டுவதே வெங்காயத்தின் சிறப்பு. என்னதான் மணக்க, மணக்க பிரியாணி இருந்தாலும் தொட்டுக்க வைக்கப்படும் தயிர் வெங்காயம் தான் உணவையே சிறக்க செய்யும்.
இப்படி சிறப்புமிக்க வெங்காயம் அவ்வப்போது விலை உயர்ந்து மலைக்க வைக்கும். பின்னர் திடீரென விலை சரிந்து வியக்க வைக்கும். அந்தவகையில் தற்போது வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்து வியக்க வைத்திருக்கிறது.
விலை குறைந்தது
தர்மபுரிக்கு மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையான பெரிய வெங்காயம், தற்போது ரூ.15-க்கு (மொத்த விலையில்) விற்பனையாகி வருகிறது. சில்லரை வியாபாரத்தை பொறுத்தவரையில் ரூ.20-க்கு விற்பனை ஆகிறது.
வெளிசந்தைகளில் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை ஆகிறது. தெருக்களில் சில்லரை வியாபாரிகள் தங்களது இருசக்கர வாகனங்களில் பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ.100-க்கு என கூவி கூவி விற்பனை செய்து வருகிறார்கள். மேலும், சிலர் நடமாடும் தள்ளுவண்டிகளில் பெரிய வெங்காயத்தை கொட்டி வைத்து விற்பனை செய்வதை காணமுடிந்தது. விலை மலிவு என்பதால் பொதுமக்களும் பெரிய வெங்காயத்தை அதிகளவில் வாங்கி சென்றனர். வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், சென்னை கோயம்மேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் 6 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சியும், அதிர்ச்சியும்...
தற்போது வெங்காயத்தின் விலை சரிவு காரணமாக, ஓட்டல்களை போலவே வீடுகளில் வெங்காயத்தின் நடமாட்டம் 'ஜாஸ்தி'யாகவே இருக்கிறது. இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை சரிந்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு, இன்னும் சில நாட்களில் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதையே வியாபாரிகளின் கருத்து மறைமுகமாக தெரிவிக்கிறது.