விருதுநகர்
மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
|அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 14-ந் தேதி சைக்கிள் போட்டி நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டிகள் விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதியன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணி அளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இப்போட்டிகளுக்கான தூரம் விவரமாவது 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ. ஆகும்.
15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. ஆகும்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதன் விவரம் வருமாறு:- முதல் பரிசு ரூ. 5ஆயிரம், 2-வது பரிசு ரூ.3ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடம் பெற்றவர்களுக்கு ரூ.250. போட்டிகளில் பங்கேற்க தகுதியான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களது வயது சான்றிதழை தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர், கையொப்பம் பெற்று 14-ந் தேதி அன்று காலை 6:30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் ஆஜராகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே மாவட்ட அளவிலான அண்ணா பிறந்தநாள் விரைவு சைக்கிள் போட்டிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.இதில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 13-ந் தேதியன்று மாலை 5 மணிக்குள் 045 62 252 947 என்ற டெலிபோன் எண்ணில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.