< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி
கடலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி

தினத்தந்தி
|
10 Oct 2023 6:45 PM GMT

அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்களுக்கான சைக்கிள் போட்டி கடலூரில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 15-ந்தேதி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் சைக்கிள் போட்டி இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கடலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நடைபெறும்.

13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 15 கி.மீட்டரும், மாணவிகள் 10 கி.மீட்டரும், 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 20 கி.மீட்டரும், மாணவிகள் 15 கி.மீட்டரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 20 கி.மீட்டரும், மாணவிகள் 15 கி.மீட்டரும், சைக்கிள் ஓட்ட வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு தலா ரூ.3ஆயிரம், 3-வது பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.

சாதாரண சைக்கிள்

வயது வரம்பு 1.7.2023 அன்று கணக்கிடப்பட வேண்டும். வயது சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வர வேண்டும். இதற்கான நுழைவு படிவத்தை மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் கொண்டு வர வேண்டும்.

முதல் 10 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்வோர் சாதாரண சைக்கிளை தாங்களே கொண்டு வர வேண்டும்.

போட்டிகளில் கலந்துகொள்வோர் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரம் முன்னரே வருகைதந்து, போட்டி நடைபெறும் இடத்தில் உரிய சான்றுகளை வழங்கி, பதிவு எண் பெற்று, தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

பதிவு

போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ- மாணவிகள் தங்கள் பெயர்களை வருகிற 13-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து, போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்