திண்டுக்கல்
ரூ.2½ கோடி பணிகளுக்கு பூமி பூஜை
|ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் சுமார் ரூ.2½ கோடி வளர்ச்சி பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு கட்டிட திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி குழுத்துணைத்தலைவர் கா.பொன்ராஜ், பழனி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அனிதா, தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்யபுவனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மருந்தக வைப்பறை கட்டிடம், கீரனூர் பஸ்நிலையம், 200 வீடு காலனி, ராஜாம்பட்டி ஊராட்சி சங்கம்பாளையம், தாளையூத்து ஊராட்சி வடக்கு லட்சலபட்டி, தாளையம் ஆகிய இடங்களில் ரேஷன்கடைகள், மேல்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள், கொத்தயம் ஊராட்சி தீர்த்தக்கவுண்டன்வலசு ஆதிதிராவிடர் காலனியில் புதிய சமுதாயக்கூடம் என மொத்தம் ரூ.2½ கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து கல்த்துறை சண்முக நதியாற்றில் தடுப்பணையில் சுமார் 60 ஆயிரம் நாட்டு இன மீன்குஞ்சுகள் விடப்பட்டன.
இந்த விழாவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராஜாமணி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, கீரனூர் தி.மு.க. பேரூர் செயலாளர் அன்பு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், கீரனூர் பேரூராட்சி தலைவர் கருப்புசாமி, துணைத்தலைவர் அப்துல் சுக்கூர், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் இசக்கி, தும்பலப்பட்டி ஊராட்சி தலைவர் வசந்தி கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்னலட்சுமி நன்றி கூறினார்.