ஈரோடு
பவானியில் இருந்து கர்நாடகாவுக்கு அளவுக்கு அதிகமாக வெடி பொருட்கள் கொண்டு சென்ற சரக்கு வேன்
|பவானியில் இருந்து கர்நாடகாவுக்கு அளவுக்கு அதிகமாக வெடி பொருட்கள் கொண்டு சென்ற சரக்கு வேனை போலீசாா் தடுத்து நிறுத்தினா்.
தாளவாடி
தாளவாடி போலீசார் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்குவேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அளவுக்கு அதிகமாக வெடிபொருட்கள் இருந்தன. உடனே போலீசார் வேனை ரோட்டு ஓரத்துக்கு ஓட்டி வரச்செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் சம்பவ இடத்துக்கு சென்று வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினார். அதில் அவர் அந்தியூரை சேர்ந்த குமார் (வயது 45) என்பதும், அவருடன் வந்தவர் பூபதி என்பவர் என்றும், அவர்கள் பவானியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அருகே உள்ள கொத்தல்வாடி என்ற இடத்தில் செயல்படும் ஒரு கல்குவாரிக்கு வெடிபொருட்களை கொண்டு செல்வதும் தெரியவந்தது. வெடிபொருட்களை கொண்டு செல்ல முறையான ஆவணங்களும் இருந்தன. ஆனால் 2 வேன்களில் கொண்டு செல்ல வேண்டிய வெடிபொருட்களை ஆபத்தான முறையில் ஒரே வேனில் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மற்றொரு வேன் வரவழைக்கப்பட்டு, பாதி அளவு வெடி மருந்துகள் அதில் பிரித்து ஏற்றப்பட்டன. பின்னர் 2 வேன்களும் பத்திரமாக கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.