தேனி
கம்பம்-நாராயணத்தேவன்பட்டி இடையேகுண்டும், குழியுமான சாலை :சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
|கம்பம் முதல் நாராயணத்தேவன்பட்டி வரை சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக கம்பம் வந்து செல்கின்றனர். நாராயணத்தேவன்பட்டியில் இருந்து கம்பத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் தான் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் மோட்டார் சைக்கிளில் சென்று வருகின்றனர். இந்த சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதன்பின்னர் பராமரிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை.
இதனால் தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. நாராயணத்தேவன்பட்டியில் இருந்து ஒடப்படி குளம் வரை உள்ள சாலையின் இருபுறம் வயல்கள் உள்ளதால் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் கொண்டு செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.