மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
|மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, வருகிற ஜூலை 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வடக்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து முடித்து விட்டு, கொல்கத்தா நகருக்கு திரும்பினார்.
எனினும் அவரது ஹெலிகாப்டர், செல்ல வேண்டிய இடத்திற்கு பதிலாக செவோக் விமான படை தளத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. தெளிவற்ற வானிலையால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மம்தா பானர்ஜிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் அக்கட்சியை சேர்ந்த ரஜிப் பானர்ஜி கூறினார்.
ஆனால், அவருக்கு முதுகு மற்றும் மூட்டு பகுதியில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஹெலிகாப்டர் திடீரென அவசரமாக தரையிறங்கியதில் காயம் அடைந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தாவின் உடல்நிலை குறித்து கவலைப்படுகிறேன்.
அவர் விரைவில் குணமடையவும், விரைவில் நலமுடன் திரும்பி வரவும் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.