எந்திர கோளாறு: 137 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
|137 பயணிகளுடன் பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சி,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் காலை 8.40 மணிக்கு தினசரி சேவையாக இயக்கி வருகிறது.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை 8.40 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் தாமதமாக நண்பகல்12.50 மணிக்கு137 பயணிகளுடன் பெங்களூரு நோக்கி புறப்பட்டது.
விமானம் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது.
விமானத்தின் கேபின் உள்பகுதியில் அழுத்தம் குறைந்துள்ளது. இதையடுத்து, விமான பைலட் முன்னெச்சரிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, ஏர் இந்தியா விமானம் உடனடியாக திருச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அதிகரிகள் நடத்திய சோதனையில் விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து கோளாறை சரிசெய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, எந்திர கோளாறால் திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதையடுத்து அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானம் மூலம் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர்.