பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்: மத்திய மந்திரி ஷோபாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
|பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய மந்திரி ஷோபாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு குண்டு வெடிப்பு குறித்து மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஒருவர் என்.ஐ.ஏ. அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது குண்டுவெடிப்பு சம்பவத்துடன் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும்.
பா.ஜ.க.வின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் கண்டிப்பாக நிராகரிப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசிய மந்திரி ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
பிரதமர் முதல் தொண்டர் வரை பா.ஜ.க.வில் உள்ள அனைவரும் கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய மந்திரியின் இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.