கடலூர்
வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள்: தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா?
|வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். கட்டிட தொழில்களில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வந்தவர்கள் இன்று எல்லா இடங்களிலும் இடம்பிடித்து வருகிறார்கள்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல தொழில் நிறுவனங்களில் முன்பு எல்லாம் மண்வாசனையை நுகர முடியும். அதாவது அங்கு வேலை செய்யும் ஆண், பெண் இருபாலரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பேசுகிற தமிழே அதை அடையாளம் காட்டும். இன்று அந்த நிறுவனங்களில்கூட திக்கித்திக்கி இந்தி கலந்து தமிழ் பேசுகிற வட மாநிலத்தவரை காண முடிகிறது. அதாவது பானி பூரி விற்பதில் தொடங்கி, கட்டிட வேலைகள், மெட்ரோ பணிகள், ஓட்டல் வேலைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், இறைச்சி கடைகள், மீன் வெட்டுதல், முடி வெட்டுதல் என அனைத்து வேலைகளுக்கும் வந்துவிட்டனர்.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும் பரவி விட்டனர்.
திணித்துக்கொள்கிறோம்
இந்தி திணிப்பை எதிர்த்துவரும் நாம், இந்திக்காரர்களை நமக்கு நாமே திணித்து கொண்டிருக்கிறோம். இதை ஆதங்கப்பட்டோ பொறாமைப்பட்டோ கூறவில்லை. அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நாம் அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும். குறைந்த சம்பளம் என்றாலும் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள். அதை வரவேற்றுத்தான் தீரவேண்டும்.
நம்மவர்கள் என்ன செய்கிறார்கள்? பசி வயிற்றில் இருந்தால்தானே அவர்களுக்கு வேலையில் பக்திவரும்? இலவசங்கள் அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டதாக யாரை கேட்டாலும் சொல்கிறார்கள்.
அர்ப்பணிப்பு இல்லை
எந்த வேலை என்றாலும் நம்மவர்கள் கூடுதல் சம்பளம் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளை குறைந்த நேரம் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அர்ப்பணிப்பு குணம் குறைந்து போய்விட்டது. 'இஷ்டம் இருந்தால் வேலை தா! இல்லை என்றால் போ!' என்ற மனநிலையில் இருக்கிறார்கள். கிராமங்களில்கூட இந்த நிலைதான் இருக்கிறது. அதனால்தான் நம்மவர்கள் இருந்தும் வடமாநில தொழிலாளர்களுக்கு நாமே சிவப்பு கம்பளம் விரிக்க நேருவதாக சொல்கிறார்கள். இதுபற்றி பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதை காண்போம்.
பாதிப்பு
கடலூர் கட்டிட மேஸ்திரி எத்திராஜ் கூறுகையில், தற்போது கட்டிட வேலையில் ஆரம்பித்து அனைத்து தொழில்களிலும் வட மாநிலத்தவர்கள் வந்து விட்டார்கள். மொசைக், மார்பிள், கிரானைட், டைல்ஸ் பதிக்கும் தொழில்நுட்ப வேலையில் கைதேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.
இருப்பினும் அவர்கள் கால நேரம் பார்க்காமல் வேலை செய்வார்கள். லீவு போட மாட்டார்கள். கட்டிடத்தின் அருகில் தங்கி இருந்து சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு அதிகாலையிலே வேலையை தொடங்கி விடுவார்கள். ஆனால் நாம் அப்படி செய்வதில்லை. காலை 10 மணிக்கு தான் வேலையை ஆரம்பிப்போம். முன்பு கட்டிட வேலைக்கு ஆட்கள் தேவை இருந்தது. தற்போது வடமாநிலத்தவர்கள் வருகையால் கிடைக்கிற வேலையை விடாமல் செய்யும் சூழ்நிலை உள்ளது. கைவினை பொருட்கள் தயாரிப்பதிலும் வடமாநிலத்தவர்கள் அதிகம் பேர் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். இருப்பினும் அவர்களின் வருகை நமக்கு பாதிப்பு தான் என்றார்.
நல்ல சம்பளம் கிடைக்கிறது
ஒடிசாவை சேர்ந்த ஜெயந்தி கூறுகையில், நான் விருத்தாசலத்தில் செராமிக் தொழில் செய்து வருகிறேன். எங்கள் ஊரில் குறைந்த சம்பளம் தான் கிடைக்கும். அதாவது அதிக நேரம் வேலைக்கு குறைந்த கூலி தான் கிடைக்கும். இதனால் நல்ல சாப்பாடு சாப்பிட முடியாது. இங்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது. செய்கிற வேலைக்கு ஏற்ப ஊதியமும் கிடைக்கிறது. இதனால் நாங்கள் குடும்பத்தோடு வந்து பல ஆண்டுகளாக வேலை செய்கிறோம். எங்கள் ஊரில் விவசாய வேலை மட்டும் தான், தொழிற்சாலைகள் பெரிதாக அப்போது இல்லை. இதனால் பல மணி நேரம் விவசாய வேலை செய்வோம். அதற்கேற்ப வருமானம் இல்லை என்றார்.
செராமிக் உரிமையாளர் ஆனந்தகோபால் கூறுகையில், நமது ஊரை சேர்ந்தவர்கள் 8 மணிக்கு பிறகு தான் வேலைக்கு வருவார்கள். அதுவும் சில நேரங்களில் காலை 10 மணிக்கு பிறகு வருவார்கள். ஆனால் வட மாநிலத்தவர்களுக்கு நிறைய சம்பளம் கிடைப்பதால் அவர்கள் முழு ஈடுபாட்டுடன் சரியான நேரத்துக்கு வந்து பணி செய்து வருகிறார்கள். இது வேலைக்கு வைத்திருக்கும் நமக்கும் பிரச்சினை இன்றி உள்ளது என்றார்.
பாதுகாப்பு
சிதம்பரம் ஓட்டல் ஊழியர் செங்குட்டுவன் கூறுகையில், ஓட்டல் வேலையில் வடமாநிலத்தவர்கள் அதிகம் பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் விருப்பப்பட்டால் 5, 6 மாதங்கள் மட்டும் இருப்பார்கள்.
அதன்பிறகு அவர்களை பார்க்க முடியாது. அதாவது வேறு ஓட்டல்களுக்கு சென்று விடுவார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. நிரந்தரமாக தங்கி வேலை செய்வோம். அவர்கள் வருகையால் எங்களுக்கு பாதிப்பு தான் என்றார்.
சிதம்பரம் ஓட்டல் உரிமையாளர் முருகேசன் கூறுகையில், நம்ம ஊர்க்காரர்கள் ஓட்டல்களில் சப்ளையராக வேலை பார்ப்பதை கவுரவ குறைவாக நினைப்பார்கள். இதனால் ஓட்டல்களில் சப்ளையர்கள் வேலைக்கு பெரும்பாலான ஓட்டல்களில் வடமாநிலத்தவர்களை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு இடம், சாப்பாடு, சம்பளம் கிடைப்பதால், அவர்கள் இங்கேயே தங்கி வேலை செய்கிறார்கள். அதோடு பாதுகாப்பும் அவர்களுக்கு இருக்கிறது என்றார்.
வங்கி ஊழியர் ஆதங்கம்
இது ஒருபுறம் இருக்க ரெயில்வே, வங்கிகள், தபால் துறை, தொலை தொடர்புத்துறை (பி.எஸ்.என்.எல்.) என அனைத்து மத்திய அரசு துறைகளிலும் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கமே அதிக அளவில் இருக்கிறது.
வங்கிகளில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் குறித்து பெயர் சொல்ல விரும்பாத வங்கி ஊழியர் ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி பகுதியில் வங்கி மேலாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் இந்திக்காரர்கள் பணியாற்றியதால், சரியாக தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்களே அந்த வங்கியை பூட்டி சீல் வைத்த சம்பவம் நடந்து உள்ளது. வட மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் வங்கி தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை அவர்களே தயாரிப்பதாக ஒரு தகவல் உள்ளது. மேலும், அவர்களின் தாய்மொழியான இந்தியில் தேர்வு எழுதும் வாய்ப்பும் உள்ளதால், வங்கி துணை அதிகாரிகள் பணிகளில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தேர்வாகின்றனர்.
இவ்வாறு தேர்வாகி வரும் வடமாநிலத்தவர்களுக்கு வங்கிகள் குறித்த புலமையும், ஆங்கில புலமையும் குறைவாகவே இருக்கும். இதனால், தமிழக வங்கி பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலும், வங்கிகளின் தலைவர்கள், செயல் இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் வடமாநிலத்தவர்களே இருப்பதால் பதவி உயர்விலும் தமிழர்கள் பதிக்கப்படுகிறார்கள்.
வடமாநிலத்தவர்கள் வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தமிழ் மொழி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்க முடியாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஆனால், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளின் குளறுபடிகளால் இது போன்று தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஆராய வேண்டும்
இந்தியை ஏற்க மறுக்கிறீர்கள், இந்திக்காரர்கள் வருவதை மறுக்காமல் மவுனமாக இருக்கிறீர்களே ஏன்? என்று சிலரிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-
சிலர் என் பிள்ளைகளை எல்லாம் இந்தி படிக்க வைக்கிறேன் என்று பெருமையாக சொல்கிறார்கள். தாராளமாக படிக்க வையுங்கள். ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு எல்லாம் வேண்டாம். எங்களிடம் கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்று இந்தியை திணிக்காதீர்கள். உலகம் சுற்ற ஆங்கிலம் போதும். தமிழ்நாட்டில் தாய்மொழி போதும்.
எங்கள் பிள்ளைகள் ஒருவேளை வடமாநிலங்களுக்கு வேலைக்கு போக நேர்ந்தால் மும்பை தமிழர்களைப் போல் பேசப் பழகிக்கொள்வார்கள். இந்தி படித்தால் எதிர்காலமும், வேலை வாய்ப்பும் இருக்கும் என்று கருதுகிறீர்கள். அப்படி என்றால் இந்தி படித்தவர்கள் எல்லாம் வேலை தேடி ஏன் தெற்கே ஓடி வருகிறார்கள்?.
இந்தியை ஏற்றுக்கொண்டால் நமது தாய்மொழியின் புழக்கத்தை அது நீர்த்துப்போக செய்யும். அண்டையில் இருக்கும் கர்நாடக மாநிலமும், வடக்கே இருக்கும் மேற்குவங்காள மாநிலமும் அதை இப்போதுதான் உணர்ந்து வருகின்றன. அதை முன்கூட்டியே உணர்ந்துதான் நம்மவர்கள் இந்தியை ஏற்கவில்லை.
இந்திக்காரர்களை ஏற்றுக்கொள்வது என்பது வேறு. பிழைப்பு தேடி வந்து இருக்கிறார்கள். உழைக்கிறார்கள். அந்த உழைப்பு நமது நாட்டுக்கு உதவியாக இருக்கிறது. நம்மவர்கள் பிழைப்புதேடி மும்பை போகவில்லையா? கர்நாடகம், கேரளா போகவில்லையா? அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும்.
அதேநேரம் அவர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே போவதை தமிழக அரசு கண்டுகொள்ளாமலும் இருந்துவிடக்கூடாது. அவர்களின் வருகையால் ஏற்பட்டு இருக்கும் தாக்கம், பெருகி இருக்கும் குற்றம், நமது வேலைகளைச் செய்ய நம்மிடம் தொழிலாளர்கள் இல்லையா? இருந்தால் ஏன் அவர்கள் அதைச் செய்ய முன்வருவது இல்லை? என்ற கோணங்களிலும் ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.