நடத்தை சந்தேகத்தால் வெறிச்செயல்: மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற டிரைவர்
|ஆத்தூர் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 41). இவர் வாடகை கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி பொன்மாரி(33). இவர்களுக்கு உஷாதேவி(13), உமாதேவி(10) ஆகிய 2 மகள்களும், தீனா மாடசாமி(8) என்ற மகனும் உள்ளனர். ஜெயக்குமார் தனது மனைவி பொன்மாரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் தனது மனைவி பொன்மாரியை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது முழங்காலால் மனைவியின் கழுத்தை நெரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் பொன்மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.