பகலில் பிச்சை... இரவில் பாலியல் தொழில்..? - சென்னையில் யாரும் அறியா பக்கம்..?
|சிறுவயது திருநங்கைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னை,
வெளியூரில் இருந்து வரும் திருநங்கைகளை ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் தள்ளுவதாக திருநங்கைகளின் தலைவிகள் மீது சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், தான் டெய்லராக உள்ள நிலையில், தன்னுடன் சக தோழிகள் 5 பேர் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். தங்களுக்கு மூத்த திருநங்கைகளாக உள்ள 3 தலைவிகள் வெளிமாநிலங்களிருந்து சமூக வலைதளங்கள் மூலம் பெண்களைப் போன்ற உணர்வுடன் இருக்கும் சிறுவயது திருநங்கைகளைக் குறிவைத்து அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் எதுவும் வழங்காமல் ஆசைவார்த்தை கூறி உறுப்பு மாற்றம் செய்வதாக வரவழைத்து அவர்களைப் பகலில் பிச்சை எடுக்க வைப்பது, இரவில் பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது என சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர்கள் திருட்டு, போதைப்பொருள் உபயோகம் போன்றவற்றை செய்வதற்கும் அந்த தலைவிகள்தான் காரணம் என்றும், இதனைத் தட்டிக்கேட்டதால் தன் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து வழக்கு போட வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள திருநங்கை, இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய விசாரணை நடத்தி 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.