< Back
மாநில செய்திகள்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு  காதுகேளாதவர்கள் காத்திருப்பு போராட்டம்
தேனி
மாநில செய்திகள்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு காதுகேளாதவர்கள் காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
1 July 2022 6:51 PM IST

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாதவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

காத்திருப்பு போராட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தேனி மாவட்ட விளையாட்டு மற்றும் காதுகேளாதவர் சமூக நலச்சங்க தலைவர் சையது அபுதாகீர் தலைமை தாங்கினார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள காதுகேளாதவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் விரைவில் கிடைக்க முகாம்கள் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என்பதால் அவர்கள் கோரிக்கை அட்டைகளை ஒரு கையில் தூக்கி பிடித்தபடி மற்றொரு கையை ஏற்றி இறக்கி கவனம் ஈர்த்தனர்.

கலெக்டரிடம் மனு

கலெக்டர் நேரில் வந்து தங்களிடம் கோரிக்கை மனுவை பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தனது அறையில் இருந்து காத்திருப்பு போராட்டம் நடந்த இடத்துக்கு வந்து, அவர்களிடம் மனுவை பெற்றார். கலெக்டரிடம், தங்களின் கோரிக்கையை சைகை மொழியில் அவர்கள் விளக்கினர்.

இந்த கோரிக்கை மனுக்களை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். கலெக்டர் அளித்த உறுதியை போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் சைகையில் மொழி பெயர்த்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்