விருதுநகர்
போலீஸ் நிலையம் முன்புபா.ஜ.க. நிர்வாகி தீக்குளித்தது ஏன்?
|திருத்தங்கல் போலீஸ் நிலையம் முன்பு பா.ஜ.க. நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிவகாசி,
திருத்தங்கல் போலீஸ் நிலையம் முன்பு பா.ஜ.க. நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பா.ஜ.க. நிர்வாகி
திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 39). இவர் பா.ஜ.க.வில் மாவட்ட நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவர் ஸ்டேண்டர்டு காலனியை சேர்ந்த தொழிலதிபர் ஈஸ்வரனிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.51 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் கூறியதுபோல் நிலத்தை வாங்கி தரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன், சத்தியராஜை போனில் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதை தொடர்ந்து திருத்தங்கல் போலீசில் ஈஸ்வரன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னர் சத்தியராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய நேரத்தில் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்த போலீஸ் அதிகாரியை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
கைது
பணம் ேமாசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட தகவல் அறிந்த சத்தியராஜ் திடீரென தலைமறைவானார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சத்தியராஜ், தொழில் அதிபர் ஈஸ்வரனிடம் ரூ.51 லட்சம் பெற்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதில் ரூ.26 லட்சத்தை திருப்பி தந்ததாக கூறப்படுகிறது. மீதி பணத்தை செலவு செய்து விட்டதாகவும் தெரிவித்த நிலையில் சத்தியராஜை போலீசார் சிறைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிபந்தனை ஜாமீனில் வந்த சத்தியராஜ் தினமும் காலை 10 மணிக்கும், மாலை 6 மணிக்கும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். இதற்கிடையில் மீதி பணம் குறித்து திருத்தங்கல் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சத்தியராஜியிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
தற்கொலை முயற்சி
ஈஸ்வரனிடம் வாங்கிய பணத்தில் ரூ.25 லட்சத்தை செலவு செய்ததாக கூறிய சத்தியராஜை, போலீசார் தொடர்ந்து அந்த பணம் குறித்து விசாரித்து வந்ததால் மனமுடைந்த சத்தியராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளுடன் நேற்று முன்தினம் மாலை போலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அவர் வரும்போதே உடலில் பெட்ரோல் ஊற்றி விட்டு வந்துள்ளார்.
போலீஸ் நிலையம் வாசலில் வந்து தனது உடலில் தீ வைத்துக்கொண்டு போலீஸ் நிலையத்துக்குள் ஓடி உள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து சத்தியராஜை காப்பற்றி உள்ளனர். இவை அனைத்தையும் யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை காப்பாற்றாமல் அதனை வீடியோ எடுத்தவர்கள் குறித்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் விசாரணை நடத்தி வருகிறார்.