< Back
மாநில செய்திகள்
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.14 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் - 4 பேர் கைது

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் ஜீவாநகர் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த படகில் கியூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

மாநில செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.14 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் - 4 பேர் கைது

தினத்தந்தி
|
25 Oct 2022 10:10 AM GMT

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.14 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் பீடி இலை கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் போலீசார் வீரபாண்டியன்பட்டினம் ஜீவாநகர் கடற்கரையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு வல்லத்தை போலீசார் சோதனை செய்ய சென்றனர். உடனடியாக வல்லத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனடியாக தப்பி ஓட முயன்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த பிரபு (வயது 41) தூத்துக்குடி அலங்காரத்தட்டை சேர்ந்த ஜெயக்குமார் (32), இந்திராநகரை சேர்ந்த ரட்சகர் (36), தூத்துக்குடி மாதவநாயர் காலனியை சேர்ந்த ரஞ்சித்(42) என்பது தெரியவந்தது.

திருச்செந்தூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை பண்டல்கள்

திருச்செந்தூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை பண்டல்கள்

தொடர்ந்து போலீசார் வல்லத்தில் சோதனை செய்தனர். அந்த வல்லத்தில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 41 பண்டல்கள் இருந்தன. அதில் ரூ.14 லட்சம் மதிப்பிலான சுமார் 1435 கிலோ பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் பீடி இலை பண்டல்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்ட படகு, பீடி இலை மற்றும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்