< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்குடியிருப்புகளுக்குள் புகுந்து ரகளை; வடமாநில வாலிபருக்கு தர்மஅடி
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்குடியிருப்புகளுக்குள் புகுந்து ரகளை; வடமாநில வாலிபருக்கு தர்மஅடி

தினத்தந்தி
|
23 July 2023 12:30 AM IST

நாமக்கல்லில் குடியிருப்புகளுக்குள் புகுந்த வடமாநில வாலிபர் அங்கிருந்த நபர்களிடம் ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

ரகளை

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொண்டிச்செட்டிப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு வாலிபர் ஒருவர் அடுத்தடுத்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆண், பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.

அதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர்கள் திருடன் என கருதி, அவருக்கு தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. அடி வாங்கிய வாலிபர் எங்கும் தப்பி செல்லாமல் அங்கேயே இருந்து உள்ளார்.

வடமாநில வாலிபர்

இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வடமாநிலத்தை சேர்ந்த மனோஜ் (வயது 30) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என கூறவில்லை.

இதையடுத்து அவரை மீட்ட போலீசார் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து தப்பிய அந்த வாலிபர், மீண்டும் வேறொரு வீட்டுக்குள் புகுந்துள்ளார். அங்கிருந்து மீட்ட போலீசார், மீண்டும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறிது நேரத்தில், மருத்துவமனையில் இருந்து வெளியேறிய வாலிபர் நாமக்கல்- –மோகனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்குள் புகுந்தார்.

பரபரப்பு

அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டினர். அப்போது அங்கு சென்ற போலீசார், அவரை பிடித்து, மீண்டும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்