குடியிருப்பு பகுதியில் குட்டிகளுடன் கரடி உலா
|நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கோத்தகிரி ஆர்.கே.சி. லைன் குடியிருப்பு பகுதியில் 3 குட்டிகளுடன் தாய் கரடி ஒன்று நடந்து சென்றது. இது அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்த தகவல் வெளியே பரவியதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் கடந்த ஒரு மாத காலமாக இந்த கரடிகள் கடைவீதி மட்டுமின்றி பல பகுதிகளில் தொடர்ந்து உலா வருகின்றன. இவை பொதுமக்களை தாக்கி அசம்பாவிதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.